விபஸ்ஸனா தியானம்

விபஸ்ஸனா இந்திய நாட்டின் தொன்றுதொட்ட தியான வழிமுறைகளில் ஒன்றாகும். விபஸ்ஸனா என்ற சொல்லுக்கு 'உள்ளதை உள்ளபடி பார்த்தல்' என்று பொருள். 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தர் இந்த முறையை மீண்டும் கண்டறிந்து, இதை உலகத்தின் அனைத்து பிணிகளையும் நீக்கும் அருமருந்தெனவும், இதுவே வாழும் கலை எனவும் போதித்தார்.

மன அழுக்குகளை வேருடன் அழித்து, அதனால் கிடைக்கப்படும் முழு விடுதலைக்கான உயர்ந்த மகிழ்ச்சியே இம்மதச்சார்பற்ற பயிற்சியின் நோக்கமாகும். 

விபஸ்ஸனா என்பது தன்னை கவனித்தல் மூலம் சுயமாற்றத்தை அடையும் ஓர் வழிமுறையாகும். இது மனம் மற்றும் உடல் இவற்றிற்கிடையேயுள்ள ஆழ்ந்த தொடர்பினை அறிய உதவுகிறது. உடலுக்கு ஆதாரமாகவும், மனதுடன் ஆழ்ந்த தொடர்பும் உடைய உடல் உணர்ச்சிகளை ஒழுங்காக கவனிப்பதன் மூலம்  நாம் இதனை அனுபவத்தில் அறியலாம். கவனத்தின் அடிப்படையிலான இந்த சுய ஆய்வுப் பயனமே மன அழுக்கைக் கரைத்து, அன்பும் கருணையும் நிறைந்த ஒரு சமச்சீரான மனதை விளைவிக்கிறது. 

ஒருவரது எண்ணங்களையும், உணர்வுகளையும், நோக்கங்களையும், உணர்ச்சிகளையும் இயக்குகின்ற அறிவியற்பூர்வமான விதிமுறைகள் தெளிவாகிறது. ஒருவர் எவ்வாறு மேம்படுகிறார் அல்லது பின்னடைவு அடைகின்றார், எவ்வாறு துன்பத்தை உற்பத்தி செய்கிறார் அல்லது துன்பத்திலிருந்து விடுபடுகிறார் என்பது நேரடி அனுபவம் மூலம் நன்கு புலனாகிறது. அதிக கவனம், மாயையின்மை, சுயகட்டுப்பாடு மற்றும்  அமைதி ஆகிய பன்புகளால் ஒருவரது வாழ்க்கை வடிவமைக்கப்படுகிறது. 

பாரம்பரியம்

விபஸ்ஸனா, கௌதம புத்தர் காலத்திலிருந்து தொடங்கி இடையீடின்றி வழிவழியாக ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட்டு இன்று வரை நிலைத்துள்ளது. இதன் தற்போதைய ஆசிரியர் திரு சத்திய நாராயண கோயங்கா அவர்களின் மூதாதையர்கள் இந்தியர்களாக இருந்த போதிலும், இவர் மியன்மார் (பர்மா) நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அங்கு இருக்கையில் அவர், உயர் அரசாங்க அதிகாரியாக பதவி வகித்து வந்த ஸயாஜி ஊ பா கின் அவரிடம் விபஸ்ஸனா பயிலும் நல்வாய்ப்பைப் பெற்றார். தம் ஆசிரியரிடம் பதினான்கு ஆண்டு காலம் பயின்ற பின், 1969 ஆண்டு முதல் அவர் இந்தியாவில் தங்கி விபஸ்ஸனா பயிற்றுவித்து வருகிறார். கீழை மற்றும் மேலை நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இன-மத பாகுபாடின்றி அவரிடம் பயின்று வந்துள்ளனர். விபஸ்ஸனா பயில பெருமளவில் மக்கள் ஆர்வம் காட்டுவதை அறிந்து அவர் 1982 முதல் தனக்கு உதவியாக துணை-ஆசிரியர்களையும் நியமித்து வந்துள்ளார்.

முகாம்கள்

பத்து நாள் குடியிருப்பு முகாம்களில் இப்பயிற்சி கற்றுத்தரப்படுகிறது. பங்குபெறுவோர் பரிந்துரைக்கப்பட்ட ஒழுக்க நெறிமுறைகளைப் பின்பற்றி, பயிற்சியின் அடிப்படைகளைக் கற்று, நன்மைத் தரும் விளைவுகளை அனுபவிக்க போதுமான அளவு பயிற்சியும் செய்கின்றனர். 

முகாமின் பொழுது கடினமான மற்றும் ஊக்கமான முயற்சி தேவைப்படுகிறது. பயிற்சிக்கு மூன்று படிகள் உள்ளன. முதல் படி என்னவெனில், முகாம் முழுவதும், கொலை செய்வதிலிருந்தும், திருடுவதிலிருந்தும், காமச் செயல்களிலிருந்தும், தவறான பேச்சிலிருந்தும், போதை உட்கொள்வதிலிருந்தும் விலகி இருத்தல் வேண்டும். ஒழுக்க நெறிமுறையின் இந்த எளிய கோட்பாடானது மனதை அமைதிபடுத்தப் பெரிதும் உதவுகிறது. இல்லையெனில் தன்னை கவனித்தல் என்னும் இப்பயிற்சி செய்யும் பொழுது மனமானது மிகவும் பதட்டம் அடையக்கூடும்.  மூக்கின் நுழைவாயிலில் வந்துசெல்லும் இயல்பான மூச்சின் ஓட்டத்தை கவனிப்பதன் மூலம் மனதின் மேல் ஆளுமையை வளர்த்துக் கொள்வதே அடுத்த படியாகும்.  நான்காவது நாளன்று மனம் அமைதியாகவும் அதிக கூர்மையாகவும் ஆகிறது. இதனால் விபஸ்ஸனா பயிற்சியை, அதாவது: உடலெங்கும் உணர்ச்சிகளை உணர்ந்து, அதன் இயல்பை புரிந்துகொண்டு, அவற்றின் மேல் உணர்ச்சி வசப்படாமல் சமநிலையுடன் இருக்கக்கூடிய பயிற்சியை ஏற்க மனம் தயாராகிறது.  இறுதியில், கடைசி நாளன்று, தியானிகள் அனைவரிடமும் நல்லெண்ணம் மற்றும் பேரன்பையும் வளர்த்துக்கொள்வதற்கான தியானத்தைப் பயில்கின்றனர். முகாமின் பொழுது வளர்த்துக்கொள்ளப் படும் தூய்மையை உயிரினங்கள் அனைத்தின் மீதும் பகிர்ந்துக்கொள்கின்றனர்.  

இப்பயிற்சி முழுவதும் ஒரு மனப் பயிற்சியே. நமது உடல் நலத்தை வளர்த்துக் கொள்ள உடற் பயிற்சிகள் செய்வது போல, நமது மன நலத்தை வளர்த்துக் கொள்ள விபஸ்ஸனா பயிற்சியை பயன்படுத்தலாம். 

உண்மையாக, பலன் அளிக்கக்கூடியதாக இருப்பதனால், இந்த பயிற்சி முறையைத் தூய்மையாக வைத்துக்கொள்ள பெரும் முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. வணிகரீதியாக இல்லாமல், இது இலவசமாகவே கற்றுத்தர படுகிறது. கற்பித்தலில் ஈடுபடுகின்ற எந்தவொருவரும் எந்தவித ஊதியமும் பெறுவதில்லை. 

விபஸ்ஸனா பயிற்சி பெற எந்த விதமான கட்டணமும் கிடையாது. உணவும், இருப்பிடமும் கூட இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. ஒரு முகாமை முழுவதுமாக முடித்து, விபஸ்ஸனாவின் பலன்களை அனுபவித்து, மற்றவர்களும் பயன்பெற வாய்ப்பு அளிப்பதற்காக கொடுக்கப்படும் ஒருவரது நன்கொடைகள் மூலம் தான் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

தொடர் பயிற்சி மூலம் பலன்கள் படிப்படியாக நிச்சயம் வந்தடையும். பத்து நாட்களில் பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என எதிர்ப்பார்ப்பது யதார்த்தத்தை மீறியதொன்றாகும். எனினும், தினசரி வாழ்வில் விபஸ்ஸனாவைப் பயன்படுத்த, ஒருவர் அதன் அத்தியாவசியங்களை முகாமின் காலகட்டத்திற்குள்ளேயே நன்கறிந்துக் கொள்ளலாம். தியானத்தை எந்தளவிற்கு பயிற்சி செய்கிறோமோ, அந்த அளவிற்கு துன்பத்திலிருந்து விடுதலையும், முழு விடுதலை என்னும் இலக்கை நெருங்கியும் செல்கிறோம். தெளிவான மற்றும் தினசரி வாழ்வில் பயன் தரக்கூடிய நலம் தரும் பயன்களைப் பத்து நாட்களிலேயே ஒருவர் பெற முடியும்.  

மனமார்ந்த மக்கள் அனைவரும் ஒரு விபஸ்ஸனா முகாமில் கலந்துகொண்டு இப்பயிற்சி எவ்வாறு பயன் அளிக்கிறது என்பதை தாமே தெரிந்துக்கொள்ளலாம். முயற்சி செய்வோர் அனைவரும், விபஸ்ஸனாவை உண்மையான மகிழ்ச்சியை அடையவும், மற்றவர்களுக்கு பகிர்ந்துக் கொள்ளவும் பயன்படக்கூடிய ஓர் மதிப்புமிக்க கருவியாக அறிவார்கள்.